Brave Of Life தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, 26 August 2013

திரும்பி வந்து விடு ...


திரும்பி வந்து விடு என் துபாய் கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து
முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும் பொழுது
காத்திருக்க வேண்டாமென கண்டித்துவிட்டு.. 
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம்
கொடுத்து விட்டு கெஞ்சுபவனைப்போல...  
மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய்
நடிக்கும் சின்னப்பையனை போல 
மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
அம்மா வருவதாக பாசாங்கு செய்யும் பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்...
கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய் 
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்...அணைப்பதும்... 
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகைசொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீயில் தள்ளி வாழ்வள்ளி என்று சென்றுவிட்டாய்.. 
என் துபாய் கணவா!
கணவா... - எல்லாமே கனவா.......?  
கணவனோடு இரண்டு மாதம்...
கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...? 
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 
வருடமொருமுறை ஒலிம்பிக்....
வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ... 
வருடமொருமுறை கணவன் ...  
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்
இது வரமா ..? சாபமா..? 
அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்...
முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின்அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா
நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா..
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
விட்டு கொடுத்து... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவைபுரிந்து...  
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...
வார விடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி... 
இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும்
நாம் பரிமாறிக் கொள்ளவேண்டும் 
இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்.. 
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!
தவணைமுறையில் வாழ்வதற்கு
வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?  
இல்லை, ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா
நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு
ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் 
விமான நிலையத்திலேயே விட்டு விட்டாயோ
என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... 
நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே
பாலையில் நீவறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் 
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
உன் துபாய் தேடுதலில்... 
தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு
அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே கணவா 
விசா ரத்து செய்துவிட்டு வா!
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... 
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்.

Tuesday, 20 August 2013

கர்ப்பக் காலத்தில்.....

கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ’மெலனின்’ எனப்படும் நிறமிகளே! 


கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது. 

கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது. 

வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். 

பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது.

கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். 

பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம். 

தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.


பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப்போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

சொல்லிவிடு வெள்ளி நிலவே....


சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா.. ..
கனவுகள் கலைந்ததம்மா
காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் காய்ந்து போனபின்
நானே என்னை தேற்றினேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா... ..
கனவுகள் கலைந்திடுமா..

உன்னை ஒருபோதும் மறவாது நான் தான் வாழ்ந்தேன்...
குற்றம் புரியாது உந்தன் மடி மீது ஏன் நான் வீழ்ந்தேன் ..
அந்த கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல் என்னுடைய பிறந்த கதை
காலங்கள் தான் போனபின்னும் காயங்கள் ஆறவில்லை..
வேதனை தீரவில்லை

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையெ
உறவுகள் கசந்ததம்மா.. ..
கனவுகள் கலைந்ததம்மா
உறவுகள் கசந்ததம்மா.. ..
கனவுகள் கலைந்ததம்மா

தொட்டகுறை யாவும் விட்டகுறை யாகும் வேண்டாம் காதல்....
எந்தன் வழிவேறு உந்தன் வழிவேறு ஏனோ கூடல்....
உன்னுடைய வரவை எண்ணி உள்ள வரை காதிருப்பேன்
என்னை விட்டு விலகி சென்றால் மறுபடி தீக்குழிப்பேன்
நான் விரும்பும் காதலனே நீ என்னை ஏற்றுக்கொண்டால்
நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்..

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையெ
உறவுகள் கசந்ததம்மா.. ..
கனவுகள் கலைந்ததம்மா
காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் சாய்ந்து போகுமா நெஞ்சி வைத்து ஏற்றினேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையெ
உறவுகள் கசந்ததம்மா.. ..
கனவுகள் கலைந்ததம்மா
உறவுகள் கசந்ததம்மா.. ..
கனவுகள் கலைந்ததம்மா

Monday, 19 August 2013

கர்ப்ப கால உடற்பயிற்சிகள்...



நன்றி குங்குமம் தோழி

சுகப்பிரசவம் சாத்தியமா?....

சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக யாரேனும் சொன்னால் அவர்களை விசித்திரமாகப் பார்க்கிற காலம் இது. தேவையோ, இல்லையோ,  பெரும்பாலான பிரசவங்கள் சிசேரியனாகத்தான் இருக்கின்றன. மருத்துவர்கள் மக்களையும் மக்கள் மருத்துவர்களையும் மாறி மாறி காரணம்  காட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா ராய் போன்ற பிரபல பெண்களே சுகப்பிரசவத்தை விரும்பி, அதற்காக மெனக்கெட்டு, முயற்சியில்  வெற்றியும் பெறுகிறார்கள். அப்படிப் பார்த்தால் சாமானியப் பெண்களுக்கும் அது சாத்தியம்தானே? மகப்பேறு மருத்துவர் கவிதா கவுதமிடம்  பேசினோம்...


பிரசவம் என்பதே செத்துப் பிழைக்கிற சம்பவம்தான். அப்படியிருக்கையில் அதென்ன சுகப்பிரசவம்?

தானாக வலியெடுத்து, பெரிய மருத்துவ உதவிகள் எதுவும் இல்லாமல், பத்து மாதக் கர்ப்பம் முடிவுக்கு வந்து, கர்ப்பப்பை வாய் திறந்து, குழந்தை  வெளியில் வருவதையே சுகப்பிரசவம் என்கிறோம். இதில் மருத்துவர் மற்றும் செவிலியரின் உதவியே தேவையிருக்காது. இந்த சுகப்பிரசவத்திலேயே  இன்னொரு வகை உண்டு, ‘அசிஸ்டெட் நார்மல் டெலிவரி’ எனப்படுகிற அதில், மருத்துவரின் உதவியோடு, கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் நிகழும்.  ‘ஃபோர்செப்ஸ்’ முறையிலும், ‘வாக்குவம்’ முறையிலும் நிகழ்கிற சுகப்பிரசவங்கள் இந்த ரகம்,

ஃபோர்செப்ஸ் என்பது, குழந்தையின் தலையின் இரண்டு பக்கங்களிலும் ராடு போன்ற ஒரு கருவியை வைத்து, குழந்தையை வெளியே இழுக்கும்  முறை, இது குழந்தை, தாய் என இருவரையும் அதிகம் பாதிப்பதால், இப்போதெல்லாம் அவ்வளவாக செய்யப்படுவதில்லை, குழந்தையின் இதயத்  துடிப்பு குறைந்தாலோ, தாயின் உடல் பலவீனமாக இருந்தாலோ ‘வாக்குவம்’ முறையில் பிரசவம் பார்க்கப்படும், குழாய் போன்ற ஒரு பகுதியைக்  குழந்தையின் தலையில் பொருத்தி, ஒருவித அழுத்தம் உண்டாக்கி, குழந்தையை வெளியே எடுப்பது.

யாருக்கெல்லாம் சுகப்பிரசவம் நிகழும்?

பெண்ணாகப் பிறந்த எல்லோருக்கும் சுகப்பிரசவம் நிகழும். ரொம்பவும் குள்ளமாக - அதாவது, 145 செ.மீக்கும் குறைவாக - உள்ள பெண்களுக்கு மட்டும்  சுகப்பிரசவம் நிகழும் எனக் காத்திருக்கக் கூடாது என்கிறது மருத்துவ அறிவியல். போலியோ தாக்கியவர்கள், இடுப்பெலும்பில் பாதிப்புள்ளவர்கள்,  முதுகெலும்பு வளைந்து, கூன் விழுந்தவர்களுக்கும் சுகப்பிரசவம் அனுமதிக்கப்படுவதில்லை. சாதாரணமாக ரத்த அழுத்தம் 120/80 என்றிருந்தால்,  சிலருக்கு பிரசவத்தின் போது அது 160/100 அல்லது 160/120 என எக்குத் தப்பாக எகிறும். அதன் விளைவாக அவர்களுக்கு வலிப்பு வரலாம், குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறக்கலாம் என்பதால், அவர்களுக்கும் சுகப்பிரசவம்  அனுமதிக்கப்படுவதில்லை.அளவுக்கதிக குண்டாக இருந்தாலும்  - அதாவது 100 கிலோ, 120 கிலோ எடை இருக்கும் பெண்களுக்கும் - சுகப்பிரசவம்  நிகழும் வாய்ப்புகள் குறைவு. 

அதிகரிக்கும் சிசேரியனுக்கு என்னதான் காரணம்?

சிசேரியன் அதிகரிக்க மருத்துவர்கள் எந்த வகையிலும் காரணமில்லை. அந்தக் காலத்தில் நமது அம்மாக்களும் பாட்டிகளும் அம்மியில் அரைத்தார்கள்.  கிணற்றில் தண்ணீர் இறைத்தார்கள். குழாயில் தண்ணீர் அடித்து நிரப்பினார்கள். இன்றைய பெண்களுக்கு எல்லாவற்றுக்கும் எந்திரங்கள் வந்து  விட்டதால் உடலுழைப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. வேலைக்குச் செல்கிற பெண்களும் பெரும்பாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே வேலை  பார்க்கிறார்கள். அந்த வேலையிலேயே களைத்து விடுகிறார்கள். உடலியக்கமே இருப்பதில்லை. 

கிராமங்களில் பிரசவ நாள் வரை எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நகர வாழ்க்கையில், கர்ப்பம் என்பதை ஏதோ ஒரு நோய்  மாதிரிப் பார்க்கிறார்கள். நின்றால் ஆகாது... நடந்தால் ஆகாது... இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். உடல் நோகாமல் அப்படியே ஒரு பொம்மை மாதிரி  இருக்கிறது, உண்மையில் கர்ப்பம் தரித்த 4வது மாதத்தில் இருந்தே நமது உடல் சுகப்பிரசவத்துக்காக தயாராகத் தொடங்கும். இடுப்பெலும்பு விரிய  ஆரம்பிக்கும். 

பிரசவ நேரம் நெருங்கியதும், குழந்தையின் தலை இறங்க, இறங்க, கர்ப்பப்பை வாய் அழுத்தப்பட்டு, ‘பிராஸ்டோகிளான்டின்’ எனப்படுகிற ஹார்மோன்  சுரக்க ஆரம்பித்து, வலியைத் தூண்டும், கர்ப்பப்பை சுருங்கி, விரிந்து, தலை வெளியே தள்ளப்பட்டு குழந்தை பிறக்கும். சிலருக்கு பிரசவ தேதி  நெருங்கியும் வலி வராது. அவர்களுக்கு மருந்து அல்லது மாத்திரை வைத்து வலியை வரவழைப்பதுண்டு. இடுப்பெலும்பு மற்றும் கர்ப்பப்பை வாய்  விரிவடையாத நிலையில், அவர்களுக்கு சிசேரியன்தான் செய்ய வேண்டி வரும்.

இதெல்லாமும் முக்கியம்...

கர்ப்பம் உறுதியான 3வது மாதத்தில் இருந்து, அந்தப் பெண்ணுக்கு மாதம் 1 கிலோ எடை கூட வேண்டும். இன்றைய பெண்களுக்கோ சர்வசாதாரணமாக  2 முதல் 3 கிலோ எடை எகிறுகிறது. மொத்த கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடையானது 10 கிலோதான் இருக்க வேண்டும். 15 - 20 எனத்  தாண்டும்போதும் அதன் விளைவால் பிரசவத்தில் சிக்கல்கள் வரலாம். எனவே கொழுப்பு, இனிப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்து, கோதுமை, கீரை,  காய்கறி, பழங்கள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

3 வது மாதத்தில் மருத்துவரிடம் ஆலோசித்து, சின்னச் சின்ன எளிய உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்கலாம்  உடம்புக்கு அசைவே கொடுக்கக் கூடாது என்கிற மனநிலையில் இருக்கிறார்கள் இன்றைய பெண்கள். ‘குனியலாமா டாக்டர்? அதனால்  ஒன்றும் ஆகாதே’ எனக் கேட்கிறவர்களும் உண்டு. இடுப்பெலும்பு விரிய, உட்கார்ந்து, எழுந்திருக்க வேண்டியது மிக முக்கியம். மருத்துவரின்  ஆலோசனையின் பேரில் அதற்கான பயிற்சிகளைத் தெரிந்து கொண்டு, தினம் அரை மணி நேரம் வீட்டிலேயே செய்யலாம். அப்படிச் செய்ததன்  பலனாக, 4.5 கிலோ உள்ள குழந்தையைக் கூட, சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார் ஒரு பெண்.

கர்ப்ப காலத்தில் முதுகு வலி, கால் வலியெல்லாம் வரும். அதில் எது நார்மல், எது பிரச்னைக்குரியது என்பதை மருத்துவரிடம் கேட்கலாம்.  வேலைக்குச் செல்கிற பெண்கள், எப்படி உட்கார்வது சரி எனத் தெரிந்துகொள்ள வேண்டும். இருக்கையில், முதுகுக்குப் பின்னால் தலையணை  வைத்துக் கொள்ளலாம். ஒருக்களித்துதான் படுக்க வேண்டும். அப்படிப் படுக்கும் போதும், முதுகுக்குப் பின்னால் தலையணை வைத்துக் கொள்ளலாம். தினம் அரை மணி நேரம் மெதுவாக நடக்கலாம்.

முதல் குழந்தை சிசேரியனில் பிறந்தால் அடுத்ததும் அப்படித்தானா?

இந்தச் சந்தேகம் நிறைய பெண்களுக்கு உண்டு. முதல் குழந்தையை சிசேரியனில் பெற்றெடுத்து, 3 வருடங்கள் கழித்து அடுத்த குழந்தையைக்  கருவுற்றால், அதை ‘வி பேக் ஆப்ஷன்’ என்போம். 2 வது பிரசவத்தின் போது, மருத்துவர் அந்தப் பெண்ணின் அருகிலேயே இருந்து கவனிக்க  வேண்டும். முதல் சிசேரியனின் போது, கர்ப்பப்பையின் மேல் போடப்பட்ட தையல் பிரிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முதல் குழந்தையை என்ன காரணத்துக்காக சிசேரியன் செய்து எடுத்தார்கள் என்பது முக்கியம்.

தலை இறங்க வில்லை, இடுப்பெலும்பு பிரச்னை போன்றவை காரணங்கள் என்றால், அடுத்ததும் சிசேரியன் செய்ய வேண்டி வரலாம். மற்றபடி,  குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்ததாலோ, ரத்த அழுத்தம் அதிகமானதாலோ, நஞ்சு கீழே வந்ததாலோ, பிரசவ வலியே வராததாலோ சிசேரியன்  செய்யப்பட்டிருந்தால், அடுத்த குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்க வாய்ப்புகள் அதிகம்.

உணவுக்கும் சுகப்பிரசவத்துக்கும் தொடர்புண்டா?

வெண்ணெய் சாப்பிட்டால் சுகப்பிரசவம் நிகழுமா, பப்பாளி சாப்பிடலாமா? மாம்பழம் சாப்பிடலாமா என்கிற மாதிரியான கேள்விகள் பலருக்கும் உண்டு.  உணவுக்கும் சுகப்பிரசவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எந்த உணவையுமே அளவோடு எடுத்துக் கொள்கிறவரை பிரச்னையும் இல்லை!


நன்றி குங்குமம் தோழி
Related Posts Plugin for WordPress, Blogger...