Brave Of Life தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, 26 September 2013

அமரர் கல்கியின் - சோலைமலை இளவரசி 9/20


                     
                     வெறி முற்றியது

அன்று பிற்பகலில் அஸ்தமிக்க இன்னும் ஒரு ஜாமம் இருந்த போது சோலைமலை இளவரசி தன்னுடைய படுக்கையறை மஞ்சத்தில் விரித்திருந்த பட்டு மெத்தையில் படுத்து அப்படியும் இப்படியும் புரண்டு கொண்டிருந்தாள். சூரியன் எப்போது மலைவாயில் விழுந்து தொலையும் எப்போது சந்திரன் குன்றின் மேலே உதயமாகும் என்று அவளுடைய இதயம் ஏங்கித் துடித்துக் கொண்டிருந்தது. இளம் பிராயம் முதல் மாணிக்கவல்லியை எடுத்து வளர்த்து உயிருக்குயிராய்க் காப்பாற்றி வந்த செவிலித்தாய் அப்போது அங்கு வந்தாள். மாணிக்கவல்லியின் நிலையைப் பார்த்துவிட்டு "அம்மணி ஏதாவது உடம்புக்கு வந்திருக்கிறதா முகம் ஒரு மாதிரி பளபளவென்று இருக்கிறதே கண் சிவந்திருக்கிறதே" என்று கேட்டாள். "ஆமாம் வீரம்மா உடம்பு சரியாகத்தான் இல்லை. அதோடு மனமும் சரியாக இல்லை" என்றாள் இளவரசி. "உடம்பு சரியில்லா விட்டால் மகாராஜா வந்ததும் வைத்தியனைக் கூப்பிட்டுப் பார்க்கச் சொல்லலாம். ஆனால் மனத்தில் என்ன வந்தது ஏதாவது கவலையா கஷ்டமா குறையா குற்றமா மகாராஜா அப்படியெல்லாம் உனக்கு ஒரு குறையும் வைக்கவில்லையே கண்ணுக்குக் கண்ணாய் வைத்து உன்னைக் காப்பாற்றி வருகிறாரே" என்று வீரம்மா கேட்டாள். "அப்பா எனக்கு ஒரு குறையும் வைக்கவில்லை தான். என்னைப் பற்றிய கவலை ஒன்றுமில்லை. சற்று முன்னால் மாறனேந்தல் சண்டையைப் பற்றி ஞாபகம் வந்தது. அதனால் வருத்தமாயிருக்கிறது" என்றாள் இளவரசி.

"லட்சணந்தான் போ மாறனேந்தல் சண்டைக்கும் உனக்கும் என்ன வந்தது அதைப்பற்றி நீ ஏன் வருத்தப்பட வேண்டும்" என்று கேட்டாள் வீரம்மா. "ஏன் என்று நீயே கேட்கிறாயே மாறனேந்தல் மகாராஜா குடும்பத்தைப்பற்றி நீதானே வருத்தப்பட்டாய் மாறனேந்தல் கோட்டையை நம்முடைய வீரர்களும் வெள்ளைக்காரர்களும் சேர்ந்து முற்றுகை போட்டிருக்கிறார்களாமே மாறனேந்தல் மகாராஜாவுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் என்ன கதி நேர்ந்ததோ என்று நினைத்தால் வருத்தமாயிருக்கிறது" என்றாள் மாணிக்கவல்லி. "அதற்காக நீயும் நானும் வருத்தப்பட்டு என்ன செய்வது கண்ணே எல்லாம் விதியின்படி நடக்கும். ஐந்தாறு வருஷத்துக்கு முன்னால் இரண்டு வம்சத்தாரும் எவ்வளவோ ஒற்றுமையாயிருந்தார்கள். அக்கரைச் சீமையிலிருந்து தலையிலே கூடையைக் கவிழ்த்துக் கொண்டு இந்த வெள்ளைக்காரச் சாதியார் வந்த பிறகுதான் இரண்டு வம்சங்களுக்கும் இப்படிப்பட்ட விரோதம் ஏற்பட்டது. மூன்று மாதத்துக்கு முன்னாலே கூட என் தங்கச்சியைப் பார்க்க மாறனேந்தல் போயிருந்தேன். அங்கு எல்லாரும் உலகநாதத்தேவரைப்பற்றி எவ்வளவு பெருமையாகப் பேசிக் கொள்கிறார்கள் தெரியுமா மன்மதன் மாதிரி லட்சணமாம் குணத்திலே தங்கக் கம்பியாம் அவர் வாயைத் திறந்து இரண்டு வார்த்தைகள் பேசினால் பசி தீர்ந்துவிடுமாம்..." "போதும் வீரம்மா போதும் இப்படியெல்லாம் பேசிப் பேசித்தான் என் மனத்தில் என்னவெல்லாம் ஆசையை நீ கிளப்பி விட்டுவிட்டாய் "

"அதற்கென்ன செய்யலாம் கண்ணே உலகமெல்லாம் தேடினாலும் உலகநாதத்தேவரைப் போன்ற மாப்பிள்ளை கிடைப்பது சிரமம். அப்படிப்பட்டவருக்கு வாழ்க்கைப்பட நீ கொடுத்து வைக்கவில்லை. இரண்டு ராஜ்யங்களுக்கும் ராணியாகும் பாக்கியம் உனக்குக் கிடைக்கவில்லை. வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது. நான் சொன்னதை எல்லாம் அடியோடு மறந்துவிடு..." "சொல்லுவதையெல்லாம் சொல்லிவிட்டு 'மறந்து போய்விடு' என்று சொன்னால் எப்படி மறக்க முடியும் வீரம்மா அது போகட்டும்; சண்டை சமாசாரம் ஏதாவது உனக்குத் தெரியுமா தெரிந்தால் சொல்லு" என்று இளவரசி கேட்டாள். "மாறனேந்தல் கோட்டை இன்று காலையே பிடிபட்டுவிட்டது என்று சொல்லிக் கொள்கிறார்கள். பாவம் மாறனேந்தல் மகாராஜாவும் மகாராணியும் இரண்டு ராஜகுமாரர்களும் என்ன கதி அடைந்தார்களோ" என்று வீரம்மா சொல்லிக் கொண்டிருந்தபோது சோலைமலை மகாராஜாவின் பாதரட்சைச் சத்தம் சமீபத்தில் 'கிறீச்' 'கிறீச்' என்று கேட்டது. உடனே வீரம்மா தன் வாயை மூடி அதன்மேல் விரலை வைத்து 'பேசாதே' என்று சமிக்ஞை காட்டிவிட்டு அங்கிருந்து சென்றாள். மகாராஜா அறைக்குள்ளே வந்ததும் இளவரசி எழுந்து நின்று வணங்கினாள். "மாணிக்கம் ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கிறது" என்று மகாராஜா கேட்டார்.

மாணிக்கவல்லி உள்ளுக்குள் பயத்துடனே "ஒன்றுமில்லை அப்பா" என்று சொன்னாள். "ஒன்றுமில்லையென்றால் முகம் ஏன் வாடியிருக்கிறது வீரம்மா எங்கே அவள் உன்னைச் சரியாகக் கவனித்துக் கொள்வதில்லைபோல் இருக்கிறது" என்று கோபக் குரலில் மகாராஜா கூறினார். "இல்லை அப்பா வீரம்மா எப்போதும் என்னுடனே தான் இருக்கிறாள். சற்று முன் கூட இங்கே இருந்தாள். நீங்கள் வரும் சத்தம் கேட்ட பிறகுதான் சமையற்கட்டுக்குச் சென்றாள். அப்பா முன்னேயெல்லாம் நீங்கள் அடிக்கடி என்னைப் பார்க்க வருவீர்கள். என்னுடன் பேசிக்கொண்டிருப்பீர்கள். என்னைக் கதை வாசிக்கச் சொல்லிக் கேட்பீர்கள். அங்கே இங்கே அழைத்துப் போவீர்கள் இப்போதெல்லாம் நீங்கள் என்னைப் பார்க்க வருவதே யில்லை. வந்தாலும் நின்றபடியே இரண்டு வார்த்தை பேசிவிட்டுப் போய்விடுகிறீர்கள். எனக்குப் பொழுதே போகிறதே இல்லை. அதனாலே தான் உடம்பும் ஒரு மாதிரி இருக்கிறது" என்றாள் மாணிக்கவல்லி. "ஆமாம் குழந்தை நீ சொல்வது மெய்தான். இப்போது நான் எடுத்திருக்கும் காரியம் மட்டும் ஜயத்துடன் முடியட்டும்; அப்புறம் முன்போல் அடிக்கடி இங்கே வந்து உன்னுடன் பேசிக் கொண்டிருப்பேன். உனக்குத் தகுந்த மாப்பிள்ளை கூடிய சீக்கிரம் நான் பார்த்தாக வேண்டும். இந்தச் சண்டை முடிந்த உடனே அதுதான் எனக்குக் காரியம்" என்று மகாராஜா சொல்லிவிட்டுப் புன்னகை புரிந்தார்.

இளவரசி முகத்தைச் சுளித்துக் கொண்டு "அதற்கு அவசரம் ஒன்றுமில்லை அப்பா உங்களை விட்டுப் பிறிந்து எங்கேயாவது தொலைதூரத்துக்குப் போவதற்கு எனக்கு மனமில்லை. ஆனால் சண்டை இன்னமும் முடியவில்லையா மாறனேந்தல் கோட்டை இன்று காலை பிடிபட்டுவிட்டதென்று வீரம்மா சொன்னாளே" என்றாள். "ஆமாம் கோட்டை பிடிபட்டு விட்டது. அந்த மடையன் மாறனேந்தல் மகாராஜாவும் கடைசியில் தன்னந் தனியாக வாளேந்திச் சண்டை போட்டுச் செத்தொழிந்தான். ஆனால் நான் எந்தக் களவாடித் திருட்டுப் பயலைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேனோ அவன் பிடிபடவில்லை. இரவுக்கிரவே தப்பி ஓடிவிட்டான். ஆனாலும் எங்கே ஓடிவிடப் போகிறான் எப்படியும் அகப்பட்டுக் கொள்வான் அவன் மட்டும் என் கையில் சிக்கும்போது..." என்று சொல்லிச் சோலைமலை மகாராஜா பற்களை 'நற நற'வென்று கடித்தார். இளவரசி சகிக்க முடியாத மனவேதனை யடைந்தாள். அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாததனால் வேதனை அதிகமாயிற்று. பேச்சை மாற்ற விரும்பி "மகாராணியும் இரண்டாவது பிள்ளையும் என்ன ஆனார்கள்" என்று கேட்டாள்.

"அவர்கள் இருவரையும் வெள்ளைக்காரத் தடியர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். அவர்களைச் சென்னைப் பட்டணத்துக் கோட்டைக்குப் பந்தோபஸ்துடன் அனுப்பி வைக்கப் போகிறார்களாம் இல்லாவிட்டால் அங்கேயிருக்கும் பெரிய துரை கோபித்துக் கொள்வாராம் அவர்களை மட்டும் என்னிடம் ஒப்படைத்திருந்தால் இந்தத் திருட்டுப் பயல் உலகநாதத்தேவன் எங்கே போனான் என்பதை அவர்கள் வாய்மொழியாகவே கறந்திருப்பேன். இப்போது தான் என்ன அவன் நேற்று இரவு நமது கோட்டைக்கு அருகாமையில் வந்தவரைக்கும் தடையம் கிடைத்திருக்கிறது. நமது கோட்டையைச் சுற்றியுள்ள காடு மலைகளிலே தான் அவன் ஒளிந்திருக்க வேண்டும். இன்று இரவு இருநூறு ஆட்கள் தொண்ணூறு நாய்களுடன் அவனை வேட்டையாடப் போகிறார்கள். அவன் எப்படித் தப்புவான் என்று பார்க்கலாம்" இவ்விதம் சொல்லி மகாராஜா "ஹா ஹா ஹா" என்று சிரித்தது பேய்களின் சிரிப்பைப்போல் பயங்கரமாக ஒலித்தது.

மாணிக்கவல்லியின் உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்த வேதனை கவலை இவற்றுடன் இப்போது ஆவலும் பரபரப்பும் சேர்ந்து கொண்டன. "மாறனேந்தல் இளவரசர் அகப்பட்டால் அவரை நீங்கள் என்ன செய்வீர்கள் அப்பா" என்று கேட்டாள். "நல்ல கேள்வி கேட்டாய் மாணிக்கம் நல்ல கேள்வி அதைப் பற்றித்தான் நானும் யோசித்துக் கொண்டிருந்தேன். யோசித்து ஒரு முடிவும் செய்து விட்டேன். அவனை நமது கோட்டை வாசலுக்கு அப்பாலுள்ள ஆலமரத்தின் கிளையில் தூக்குப் போடப் போகிறேன். தூக்கில் மாட்டியவுடனே அவன் செத்து விடுவான். ஆனாலும் அவன் உடலை மரக்கிளையிலிருந்து இறக்க மாட்டேன். அங்கேயே அவன் தொங்கிக் கொண்டிருப்பான். கழுகும் காக்கையும் அவன் சதையைக் கொத்தித் தின்றபிறகு எலும்புக்கூட்டைக் கூட எடுக்க மாட்டேன் சோலைமலை மகாராஜாவை அவமதித்தவனுடைய கதி என்ன ஆகும் என்பதை உலகம் எல்லாம் அறியும்படி அவனுடைய எலும்புக்கூடு ஒரு வருஷமாவது நமது கோட்டை வாசலில் தொங்க வேண்டும்" என்றார் மகாராஜா.

சொல்லமுடியாத பயங்கரத்தையும் அருவருப்பையும் அடைந்த மாணிக்கவல்லி கம்மிய குரலில் "அப்பா இது என்ன கோரமான பேச்சு" என்றாள். "பேச்சு இல்லை மாணிக்கம் வெறும் பேச்சு இல்லை நான் சொன்னபடியே செய்கிறேனே இல்லையா என்று பார்த்துக் கொண்டிரு இதோ நான் போய் இராத்திரி வேட்டைக்கு ஆயத்தம் செய்ய வேண்டும். நீ உன் உடம்பைக் கவனமாகப் பார்த்துக்கொள். வீரம்மா உன்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளாவிட்டால் அந்தக் கழுதையைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டு வேறொருத்தியை வைக்கிறேன் தெரிகிறதா" என்று சொல்லிவிட்டுச் சோலைமலை மகாராஜா மறுபடியும் பாதரட்சை 'கிறீச்' 'கிறீச்' என்று சப்திக்க வெளியேறினார். மகாராஜா போனபிறகு இளவரசி சிறிது நேரம் பிரமை பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். கொஞ்சங் கொஞ்சமாகப் பிரமை நீங்கிப் புத்தி தெளிவடைந்தது.


இன்று முதல் மாறனேந்தல் மகாராஜாவாகி விட்ட உலகநாதத் தேவருக்கு நேர்ந்துள்ள பெரிய அபாயத்தை நினைக்க நினைக்க அவரை அந்த அபாயத்திலிருந்து எப்படியாவது தப்புவிக்க வேண்டும் என்பதில் அவளுடைய உறுதி வலுவடைந்தது. அன்று காலையிலேயே அவளுடைய உள்ளத்தில் உதித்திருந்த காதல் வெறி வளர்ந்து முதிர்ந்தது. யோசித்து யோசித்துப் பார்த்து உலகநாதத் தேவரைக் காப்பாற்ற ஒரே ஒரு வழிதான் உண்டு என்பதை அவள் உணர்ந்தாள். அவரைச் சில நாள் வரையில் கோட்டைக்குள்ளேயே இருக்கும்படி செய்தாக வேண்டும். தந்தையின் கோபம் சிறிது தணிந்தபிறகு அவருக்குத் தன்னிடம் உள்ள அன்பைப் பயன்படுத்தி அவருடைய பழிவாங்கும் உத்தேசத்தைக் கைவிடச் செய்ய வேண்டும். இந்த வழியைத் தவிர வேறு வழி கிடையாது என்று இளவரசி உறுதி செய்து கொண்டாள். பிறகு முன்னைவிட அதிக ஆவலுடன் அவள் இரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

Wednesday, 18 September 2013

இயற்கையின் கொடை வேம்பு ...

விவசாயிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பெரும்பாலும் பூச்சிக் கொல்லி மருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பூச்சிக் கொல்லி மருந்துகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் நன்மை செய்யும் பூச்சிகளான தட்டான், ஊசித் தட்டான், பொறி வண்டு, தரை வண்டு, சிலந்திகள், குளவிகள், தேனீக்கள் போன்றவை பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச் சூல்நிலைகளையும் பாதிக்கிறது.

பூச்சிக் கொல்லி மருந்துகளை திரும்பத் திரும்ப தெளிப்பதனால் பூச்சிகளானது பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு எதிர்ப்புத் தன்மையை உருவாக்கி கொள்கின்றன.
இது மட்டுமல்லாமல், நாம் உண்ணும் உணவு தானியங்களிலும் காய்கறிகள் மற்றும் பழங்களிலும் எஞ்சிய நஞ்சானது தேங்கி விடுகிறது. இதனால் மனிதர்களுக்கும், அவர்களைச் சார்ந்த விலங்கினங்களும், பறவைகளும் பல்வேறு வகையான நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டு ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
உலகில் மிக அதிகமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட மரங்களில் வேம்பு முதன்மையானது. இதன் பாகங்களான இலை, பூ, விதை, பட்டை போன்றவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகித்தாலும் வேப்பங்கொட்டையானது ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேம்பு 350 வகையான பூச்சிகளையும், 15 வகையான பூஞ்சாணங்களையும், 12 வகையான நூற்புழுக்களையும், 2 வைரஸ் கிருமிகள் மற்றும் 2 வகையான நத்தைகளையும் கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுவதால் இதை மக்கள் சர்வலோக நிவாரணி, இயற்கை கொடை, அதிசய மரம் மற்றும் கிராம மருந்தகம் என அழைக்கின்றனர். வேம்பின் கசப்புத் தன்மைக்கு காரணம் அசாடிராக்டின் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அசாடிராக்டின் சுமார் 550 வகையான பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. இவை பூச்சிகள் பயிர்களை உண்பதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் பூச்சிகள் முட்டையிடுவதையும், முட்டையில் இருந்து இளம் பூச்சிகள் வெளியே வருவதையும் தடுக்கின்றன. பூச்சிகளின் வளர்ச்சியையும் பாதிக்கிறது.
இவை அந்துப் பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள், வண்டுகள், கூன் வண்டுகள், ஈக்கள், எறும்புகள், குளவிகள் நாவாய் பூச்சிகள், வெட்டுக் கிளிகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் கரையான்கள் போன்ற பூச்சிகளின் வளர்ச்சி மாற்றத்தைப் பாதிக்கின்றன. மேலும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு நோய்களைப் பரப்பக்கூடிய ஈக்கள், உண்ணிகள், பேன்கள் மற்றும் சிலந்திகளைக் கட்டுப்படுத்துவதில் அசாடிராக்டின் பயன்படுத்தப்படுகிறது.
விவசாயப் பயிர்கள்: நெற்பயிரில் வேப்பெண்ணெய் 1 சதம் (10 மிலி-லிட்டர்) அல்லது வேப்பங் கொட்டைச் சாறு 5 சத கரைசலை தெளிக்கும்போது இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் குறைகிறது. வேப்பங் கொட்டைச்சாறு 5 சத கரைசலைத் தெளிப்பதால் புகையானின் வளர்ச்சி பருவமானது பாதிக்கப்படுகிறது. மேலும் அதன் உருவம் மற்றும் எடையிலும் மாற்றம் ஏற்படுகிறது. வேப்பெண்ணெய் (3 சதம்) நெற்பயிரை கதிர் நாவாய்ப் பூச்சிகள் தாக்குதல் இருந்து பாதுகாக்கிறது.
கொண்டைக் கடலையில் வேப்பங்கொட்டைச்சாறு அல்லது வேப்பெண்ணெய் (5 சதம்) தெளிப்பதால் காய்த் துளைப்பானின் தாக்குதல் வெகுவாகக் குறைகிறது. அசாடிராக்டின் கலந்த மருந்தை தெளிக்கும்போது காய்த்துளைப்பானின் தாக்குதலாவது 90 சதவீதம் வரை குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வேப்பங்கொட்டைச்சாறு துவரையில் காய்த் துளைப்பான்களையும், தட்டைப் பயிரில் அசுவினியின் தாக்குதலையும் குறைக்கிறது.
நிலக்கடலையில் இலைத் துளைப்பானைக் கட்டுப்படுத்துவதில் வேம்பு சார்ந்த மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேப்பெண்ணெய் மற்றும் வேப்பங்கொட்டைச்சாறு தெளிக்கப்பட்ட இலைகளை தொடர்ந்து உண்பதால் நிலக்கடலையில் சிவப்பு கம்பளி புழுவானது குறைந்து விடுவதாக ஆராய்ச்சியில் தெரிவிக்கின்றன.
நன்மைகள்: வேம்பு மற்றும் வேம்பு சார்ந்த பொருட்களால் சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. வேம்பானது பூச்சிகளை கொல்வதில்லை. மாறாக பூச்சிகளின் வளர்ச்சி பருவத்தைப் பாதிக்கின்றன. இவை நன்மை செய்யும் பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் தேனீக்களை எதுவும் செய்வதில்லை. வேம்பு சார்ந்த பொருள்களுக்கு பூச்சிகள் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கிக் கொல்வதில்லை. இதனை செயற்கையாகத் தயாரிக்கப்படும் மருந்துகளுடன் கலந்தும் தெளிக்கலாம்.

வேம்பானது எளிதில் கிடைக்கக் கூடியது மற்றும் வேம்பு சார்ந்த மருந்துகளின் விலையும் மிகவும் குறைவு. எனவே ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் வேம்பு மற்றும் அதனைச் சார்ந்த மருந்துகளைப் பயன்படுத்தி இயற்கைக்கு எவ்வித சேதாரமும் இல்லாமல், நன்மை செய்யும் பூச்சிகளையும் பாதிக்காமல் இயற்கையுடன் ஒருங்கிணைந்து பூச்சிகளை கட்டுப்படுத்தி அதிக லாபம் ஈட்டலாம் 

Tuesday, 17 September 2013

மனதை உலுக்கும் ‘மௌன வசந்தம்

மனதை உலுக்கும்மௌன வசந்தம்’!


-நம்மாழ்வார்
தினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சுவீடன் நாட்டுப் பயணிகள் குழு ஒன்று தமிழ்நாட்டுக்கு வந்தபோது அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.



அவர்களில் ஒரு அம்மையாரின் பெயர் ரூத். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, 'உலகம் முழுவதும் உள்ளவர்கள் பொய் சொல்கிறார்கள்என்று ஒரு குற்றச்சாட்டை எடுத்து வைத்தார் ரூத். குறுக்கிட்ட நான், 'எப்படி ஒரேயடியாக இதை நீங்கள் சொல்ல முடியும்?' என்றேன்.

'பூச்சிக் கொல்லி (pesticide) என்பதையே எடுத்துக்கொள்ளுங்களேன்...' எனச் சொல்லி என் கண்களை நேராகப் பார்த்தார் ரூத். 'அதற்கென்ன... பூச்சிகளைக் கொல்லும் மருந்து தானே பூச்சிக்கொல்லி' என்றேன் நான்.
'மருந்து என்கிறீர்கள்... அதில் கொஞ்சம் நீங்கள் சாப்பிடமுடியுமா?' என்று அவர் திகில் கிளப்பி  'அதை நீங்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும்?' என்று கொக்கிப் போட்டார். 'விஷம் தாக்கிச் செத்து போவேன்' என்றேன்!

'நேரடியாகச் சாப்பிடும்போது அது மனிதர்களைக் கொல்லும் என்றால், அது எப்படி 'பூச்சிக் கொல்லி'யாக மட்டுமே இருக்க முடியும். அதை உயிர்கொல்லி என்று சொல்வதுதானே சரியாக இருக்க முடியும். இப்போது புரிகிறதா... நாமெல்லாம் பொய்தான் சொல்கிறேம் என்று?' என்று காட்டமாகக் கேட்டார் ரூத்.

அதுமட்டுமில்லை... பூச்சிக்கொல்லியை நேரடியாக சாப்பிட்டால்தான் ஆபத்து என்றில்லை. காய், கனி, பால், முட்டை, இறைச்சி, குடிநீர், தாய்ப்பால் என்று எந்த வடிவிலும் அது நமது உடல் புகுந்து சிறுக சிறுக துன்பத்துக்கு ஆளாக்கிக் கொண்டு  தானிருக்கிறது.

உங்களுக்கு நரம்புத்தளர்ச்சி உள்ளதா... மூச்சுத் திணறலா... சிறுநீரகத்தில் கல் அடைப்பா... கர்ப்பப் பையில் புற்றுநோயா...  இப்படி எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி... உங்கள் உடலில் கண்ணுக்குத் தெரியாமல் போய்ச் சேர்கின்ற  பூச்சிக்கொல்லி நஞ்சுக்கும் பங்கிருக்க வாய்ப்பு உண்டு. பூச்சிக் கொல்லி நஞ்சு என்பது செடிகளிலிருந்து பசுவின் வயிற்றுக்குள் போய், பால் வழியாக நமது உடலுக்குள் பாய்வதும் நடக்கிறது. தாய் வயிற்றுக்குள் இருந்து ரத்தம் பெற்றோமே... அன்று தொடங்கியே நம் தாயோடுசேர்த்து நாமும் நஞ்சுண்ட ()சாமிகள்தான்கேரள மாநிலத்தின் முந்திரிக்காடுகளில் ஹெலிகாப்டர் மூலம் 'எண்டோசல்பான்' என்ற பூச்சிக் கொல்லி தெளிக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில்.... சுற்றுப்புறத்து ஊர்களில் பல குழந்தைகள் ஊனமாகப்  பிறந்தன. இத்தனைக்கும் அந்த முந்திரிப் பருப்பை குழந்தைகளின் தாயார் தின்னவுமில்லை, முந்திரிக்கொல்லையில் வேலை பார்க்கவும் இல்லை. நஞ்சு கலந்த காற்றை சுவாசித்தது,காற்று வழியே நஞ்சு படிந்த ஓடையின் நீரை குடித்ததும்தான் பெருங்குற்றம் ஆகிப்போனது.
கொடுமையிலும் கொடுமை என்னவென்றால்,  நமது தேசத்தில் இப்படி ஆண்டுதோறும் ஆயிரம் லட்சம் கிலோ நஞ்சை நமது பயிரிலும் நிலத்திலும்,  நீரிலும்,  காற்றிலும் கலந்துகொண்டே இருக்கிறோம். இப்படியெல்லாம் நடக்குமென்று 1962-ம் ஆண்டே அமெரிக்காவைச் சேர்ந்தராச்சேல் கார்சன் என்ற பெண் எச்சரித்தார்.

கடலியல் விஞ்ஞானியான அவர் எழுதிய 'மவுன வசந்தம்' என்னும் புத்தகம் உலக பிரசித்திப் பெற்றது. இந்தப் புத்தகம் எதைப் பற்றி பேசுகிறது?


அமெரிக்காவில் பனிக்காலம் மிகவும் கொடுமை யாக இருக்கும். அந்தக் கொடுமை தாங்காமல் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் ராபின் பறவை, வசந்தம் பிறக்கும்போதுதான் நாடு திரும்பும். வசந்தத்துக்கு கட்டியம் கூறும் அந்த ராபின் பறவை, அமெரிக்காவிலிருந்தே காணாமல் போக ஆரம்பித்தது. அதுவே 'மவுன வசந்தம்' என்ற புத்தகம் பிறக்கக் காரணமானது.

1956-ம் ஆண்டு வாக்கில் இங்கிலாந்து நாட்டில் நடந்த சம்பவம்தான் இப்படிஒரு நூல் பிறக்க காரணம். அந்த நாட்டின் சாலையோர மரங்களின் இலைகளை ஜப்பான் வண்டுகள் தின்று அழித்துக்கொண்டிருந்தன. அந்த வண்டுகளை அழிக்க பூச்சிகொல்லியை ஹெலிகாப்டர் மூலம்தெளித்தார்கள். ஜப்பான் வண்டுகள் செத்துப் போயின. ஆனால், இன்னொரு விபரீதம் நிகழ்ந்தது. நஞ்சு படிந்த இலைகள் உதிர்ந்தபோது, அதைத் தின்ற மண்புழுக்கள் இறந்து போயின. மண்புழுவைத் தின்ற ராபின் பறவைகளும் இறந்து போயின.ஹெலிகாப்டர் தூவிய நஞ்சு, நீரில் விழவே மீன்கள் அரை மரண நிலையில் நீரோடையில் மிதந்தன. கொடுமை இத்தோடு முடியவில்லை.  மண்புழுவை உண்ட பறவைகள், கூடுகட்டவில்லை. அதைவிட சற்றே குறைவாக மண்புழுவை உண்ட பறவைகள்  கூடு கட்டின. ஆனால், முட்டை இட்டதே தவிர அவை குஞ்சு பொறிக்கவில்லை! 13 நாட்களில் முட்டையிலிருந்து வெளி வரவேண்டும் குஞ்சு. 21 நாளாகியும் குஞ்சு வராதது கண்டு தாய்ப்பறவை ஏங்கிப் போனது. பூச்சிக் கொல்லி மருந்துகள் உயிரணுவை அழித்து, உயிரினங்களை மலடாக்குகிறது என்று அப்போது கண்டறிந்தனர்.

அமெரிக்காவின் தேசியப் பறவையான வழுக்கை தலைக் கழுகும் மெல்ல மெல்ல மறைந்து வரு வதைப் பார்த்தார்கள். இந்த விஷயங்களை எல்லாம் தான் புத்தகமாக எழுதி  உலகுக்கு வெளிப்படுத்தி அதிர வைத்தார் ராச்சேல் கார்சன். இதற்கு நடுவேதான்... சேற்றிலே செந்தாமரைமலர்வது போல், அமெரிக்காவில் ரொடேல் என்கிற விவசாயி, தன் பெயரில் இயற்கை வழிப் பண்ணை ஆராய்ச்சி நிறுவனத்தை வளர்த்தெடுத்தார். இன்று உலகெங்கும் வெற்றிக் கொடி நாட்டி வரும் இயற்கை வழிப் பண்ணைக்கு முன்னோடிகள் அமெரிக்காவும் ஜப்பானும்தான். ஆனால், அதெல்லாம் இந்த நவீன யுகத்தில்தான். இவர்களுக்கெல்லாம் முன்னோடி இந்தியாதான். ஆம்... அமெரிக்க விவசாயி ரொடேல், இயற்கை விவசாயத்தை படித்துச் சென்றதே இங்கிருந்துதான்..!

பசுமை விகடன்: 25.02.2007
Related Posts Plugin for WordPress, Blogger...